சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்டாக் முறையைக் கட்டாயமாக்க டிசம்பர் 15 வரை கால அவகாசம் கொடுக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் காத்துக் கிடப்பது பிரச்சினையாக இருந்து வருகிறது. சுங்கக் கட்டணம் செலுத்துவதில் தாமதம், சில்லறை வழங்குவதில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் வாகனங்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கவேண்டியுள்ளது.
இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் ஃபாஸ்டாக் கட்டண முறை அமலுக்கு வந்தது. இதன் மூலம் சுங்கக் கட்டணத்தை டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாகச் செலுத்தலாம் என்பதால் சுங்கச் சாவடிகளில் நெரிசல் குறையும். 2014ஆம் ஆண்டிலேயே ஃபாஸ்டாக் முறை பயன்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில், 2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு ஃபாஸ்டாக் முறை அதிகமாக ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.